search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி"

    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
    அமராவதி: 

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, ஆந்திரா மாநிலத்தின் முதல் மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவ்ர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழகம் சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 5-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 117 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல் - மந்திரியாக நவீன் பட்நாயக் இன்று பதவி ஏற்றார். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள இட்கோ கண்காட்சி மைதானத்தில் நடந்த விழாவில் அவருக்கு கவர்னர் கணேஷிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


    நவீன் பட்நாயக் முதல் முறையாக பொது மைதானத்தில் பதவி ஏற்றார்.

    அவர் இதற்கு முன்பு 2000, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் முதல் மந்திரியாக பதவி ஏற்று இருந்தார். தற்போது தொடர்ந்து 5-வது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்று உள்ளார்.

    இதற்கு முன்பு 4 முறையும் அவர் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்று இருந்தார்.

    பதவி ஏற்பு விழாவில் நவீன்பட்நாயக்கின் சகோதரரும், தொழில் அதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும், பிரபல எழுத்தாளருமான கீதா மேத்தா உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏராளமான பி.ஜு ஜனதா தள தொண்டர்களும் திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ஒடிசா மாநிலத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்று சாதனை படைத்த நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒடிசா மாநிலத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார். #YogiAdityanath #BJP #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

    நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

    ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.
    உத்தரபிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். #BJP #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.



    அதோடு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, ஷெட், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #BJP #YogiAdityanath
    தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ஐதராபாத்:

    ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அவர் தயாரானார்.

    தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,  மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.



    இதையடுத்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.  முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலுங்கானா முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #TelanganaElections #ChandrashekharRao #Modi
    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #VasundharaRaje #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.



    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170  வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அம்மாநில  முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    கடந்த 1985-ம் ஆண்டு முதன்முதலாக தோல்பூர் தொகுதியில் சட்டசபை தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற வசுந்தரா, பின்னர் 1989 முதல் 2003 வரை ஜல்வார் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    தற்போது, ஜல்ராப்பட்டான் தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் வெற்றி பெற்றால் ஐந்தாவது முறையாக அம்மாநில சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.   #VasundharaRaje #Rajasthanpolls
    மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி லால் தன்ஹாவ்லா கடிதம் எழுதி உள்ளார். #Mizoram #LalThanhawla #Modi #ChiefElectroralOfficer
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. லால் தன்ஹாவ்லா முதல்-மந்திரியாக இருக்கிறார். அம்மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.பி.சசாங்கை உடனடியாக நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி கடிதம் எழுதி உள்ளார். அதில், சசாங்க் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டதாகவும், சுமுகமாக தேர்தல் நடைபெற அவரை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதிய நியமனம் செய்ய முடியாவிட்டாலும், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சசாங்க் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சபாநாயகருமான ஹிப்பி நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகினார்.

    அதனை தொடர்ந்து அவர் உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்தார். தன்னை முதல்-மந்திரி மனவேதனை அடைய செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். 
    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பாரதிய ஜனதா முதல் மந்திரி வசுந்தரா ராஜே கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். #BJP #VasundharaRaje
    அஜ்மீர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தராராஜே, “கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.



    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதே மோடியின் குறிக்கோளாக இருக்கிறது. இதன்படி கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வசுந்தராராஜே தேர்தல் தேதி தெரிவிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு இலவச மின்சார திட்டத்தை வெளியிட்டார். தேர்தல் தேதி 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அவர் 2 மணிக்கு இதை தெரிவித்தார். 12 லட்சம் விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

    மக்களின் அதிருப்தியை சமாளிக்க முதல்-மந்திரி வசுந்தரா கடைசி நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #BJP #VasundharaRaje
    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வரவேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு :

    காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த, காந்தியின் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதுபோல, துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா, காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் காந்தி பவனில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களின் தலைநகரங்களிலும் காந்திபவன் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் காந்திபவன் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. அந்த மாவட்டங்களில் எங்கு இடம் இருக்கிறது என்பதை கண்டறிந்து, அங்கு காந்திபவன் கட்டப்படும். 30 மாவட்டங்களிலும் காந்திபவன் கட்டப்படும். நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக வெளியே சென்று விட்டு எந்த பிரச்சினையும் இ்ல்லாமல் வீட்டிற்கு வர வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாகும். அவரது கனவை கர்நாடகத்தில் நினைவாக்க நான் மிகவும் விரும்புகிறேன். மக்கள் நிம்மதியாக வாழ சட்டவிரோதமாக நடைபெறும் சம்பவங்களை தடுக்க வேண்டும். கொள்ளையர்களை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்காக பெங்களூரு நகர போலீஸ் துறைக்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்துள்ளேன்.

    எந்த விதமான நெருக்கடிகளுக்கும் அடி பணியாமல் சுதந்திரமாக மக்களுக்காக பணியாற்றும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நான் சொன்னால் கூட நீங்கள் கேட்க வேண்டாம், நேர்மையாக பணியாற்றுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்காக போலீசாருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது.



    பல கோடி ரூபாயை வைத்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபடும் விடுதிகள் மீது போலீசார் சோதனை நடத்தி வருவதுடன், சூதாட்டத்திற்கு கடிவாளம் போட்டு வருகின்றனர். பெங்களூருவில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தற்போது பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. நகரின் பாதுகாப்புக்காக பல கோடி ரூபாய் செலவில் பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்த அரசின் நோக்கமாகும்.

    இதற்கு முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தேன். லாட்டரி விற்பனையை தடை செய்தேன். அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிப்பேனா?. புதிய மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்க நான் ஆலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அது தவறானது. மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவ்வாறு புதிய மதுக்கடைகள் திறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அதனால் புதிய மதுக்கடைகள் திறக்க ஒரு போதும் அனுமதி அளிக்க மாட்டேன்.

    ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை விருப்பம் இல்லாமல் நடத்துவதாக சிலர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். ஜனதா தரிசனம் நிகழ்ச்சியில் காலையில் இருந்து இரவு வரை மக்களின் குறைகளை கேட்டு அறிவதுடன், ஏராளமான மக்களின் குறைகளை சரி செய்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அப்படி இருந்தும் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடாது என்பதாலும், விவசாயிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தேன். ஒரு விவசாயி தற்கொலை செய்வதால், அவரது குடும்பமே வீதிக்்கு வந்து விடுகிறது. அதனால் எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்யும் முடிவுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். #Karnataka #ChiefMinister #Kumaraswamy 
    அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், அவர்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி முதல்-மந்திரி குமாரசாமிக்கு, மந்திரி பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார். #Karnataka #Kumaraswamy
    பெங்களூரு :

    கூட்டணி ஆட்சியில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்து வருபவர் பிரியங்க் கார்கே. இவர், முதல்-மந்திரி குமாரசாமிக்கு எழுதி இருந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக அரசு ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

    இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி, அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்பதை அமல்படுத்தி செயல்படுத்தினார்.



    அப்போது அரசு ஊழியர்கள் சிறப்பாகவும், ஊக்கமாகவும் பணியாற்றினார்கள். கோப்புகள் தேங்காமல் பார்த்து கொண்டனர். நாளடைவில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறைகள் மாற்றப்பட்டு, 6 நாட்கள் பணியாற்றியே தீர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் அது தொடருகிறது.

    இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றினால் போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறைகள் வழங்கக்கூடாது. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இதனை முதல்-மந்திரி குமாரசாமி தனது ஆட்சியில் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    வாரத்தில் 6 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றும் நடைமுறையை அமல்படுத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். #Karnataka #Kumaraswamy
    கர்நாடகத்தில் வருகிற 12-ந்தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி உறுதிபட கூறியுள்ளார். #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy
    பெங்களூரு:

    காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதை கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்பது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஒரு இடங்களும் இருக்கிறது. மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நான் கூட, காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேசி வருகிறேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களால் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி. ஒரே நேரத்தில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களும் நிரப்பப்படும்.

    கடந்த மாதம் (செப்டம்பர்) மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா வெளிநாட்டு பயணத்தால் அப்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடியாமல் போனது. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்திருப்பதுடன், மேல்-சபைக்கு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுபோன்ற எல்லா பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் 30 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.  #Karnataka #CabinetExpansion #ChiefMinister #Kumaraswamy 
    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்ற சித்தராமையாவின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர். 2 கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரிகளாக உள்ளனர்.

    இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளார். கூட்டணி ஆட்சி நடந்தாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பல வி‌ஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சமயத்தில் சித்தராமையா கூறிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குமாரசாமி டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது கூட்டணி அரசு தொடர்பாக கருத்துக்களை வெளியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்து இருந்தது. இதனால் அவர் கூட்டணி அரசு குறித்து கருத்து ஏதும் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் நேற்று இரவு நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

    மக்களின் ஆசி இருந்தால் நான் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன். 2-வது முறையாக நான் முதல்-மந்திரி ஆவதை எதிர்கட்சிகள் கைகோர்த்து கொண்டு தடுத்தன. எதிர்பாராத விதமாக என்னால் முதல்-மந்திரியாக முடியவில்லை. ஆனால் இதுவே இறுதி அல்ல. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சாதாரணமானது.

    கர்நாடகத்தில் ஜாதியும், பணமும் அரசியலில் பரவி கிடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சித்தராமையா அடிக்கடி குமாரசாமி அரசை விமர்சித்து பேசி வருவதால் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அதிருப்தியுடன் இருந்து வருகிறார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய குமாரசாமி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். அப்போது அவர் பேசியது, ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி அரசில் விரிசல் இருப்பதை காட்டியது. இது குறித்து குமாரசாமி பேசிய பேச்சு வருமாறு:-

    முதல்- மந்திரி பதவி என்பது ரோஜா பூக்களால் நிறைந்த படுக்கை அல்ல. அது முட்கள் நிறைந்தது. மக்களுக்காகவே முதல்-மந்திரி பதவியில் இருக்கிறேன். நெருக்கடி அதிகரித்தால் ராஜினாமா செய்ய தயார்.

    இவ்வாறு குமாரசாமி பேசியதால் அந்த நேரத்தில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு தற்போது சித்தராமையா பேசிய பேச்சால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. #Siddaramaiah

    ×